அமானுஷ்ய அனுபவம்-09
வழிவிடு கருப்பா:
அந்திசந்தி நேரத்திலும்
ஆபத்து நேரத்திலும்
வந்திங்கே காத்திடவே
மஞ்சனத்தி அழகன் வாரார் - நம்ம
மருதங்குடிக் கருப்பன் வாரார்
நோய்விரட்டி பேய்விரட்டி
தாய்போலச் சேய்காக்க
மாயவனின் தூயவனும்
வாழ்வளிக்க இங்கே வாரார் - நம்ம
நெய்வாச கருப்பன் வாரார்.
தென்மாவட்ட மக்களின் பிரதான தெய்வம், பொதுவாக இவரை மலையாளதேசத்திலிருந்து வந்ததாக கூறுவர். பதிணெட்டாம்படி கருப்பருக்கு மட்டுமே இக்கதை பொருந்திவரும் என்பது என் கருத்து, பிற ஊர்களில் வணங்கும் கருப்புகளெல்லாம் அவரவர் முன்னோர்களே, நமது பாட்டன் பெயரே நினைவில் இருப்பதில்லை நமக்கு. அப்படியிருக்க எத்தனையோ நூற்றாண்டு கடந்து வணங்கப்படும் முன்னோரின் பெயர் நினைவுபடுத்தல் சாத்தியமன்று, ஆகவே அவர்களுக்கு பொதுவான பெயர் "கருப்பு".
நிறைய நடுகற்களை வழிவழியாய் வணங்கும் மக்கள் அவர்களை "சாவாங்கருப்பு" என்றே குறிப்பிடுவதை நினைவிற் இங்கே கூறலாம். கருப்பு என்பவரை பொதுவாக காக்கும் கடவுள் என்றே பலரும் கூறுகின்றனர்.
மூவேந்தர் போன்று நிலையாக ஒரு கட்டமைப்பு அரசாங்கம் தோன்றும் முன்பு சின்ன சின்ன குழுக்களின் தலைவன் அல்லது வீரன் வனவிலங்கிடமிருந்தோ, ஆநிரை மீட்டலோ, அல்லது இருப்பை தக்கவைக்க என எதோ ஒரு பெருஞ்செயலுக்காய் தன் உயிரை குடுத்தவன் நினைவாய் கோவிலெழுப்பி வணங்குவது நம் பழம்மரபு. அவருக்கு கருங்கல் கோவில் இல்லை, வருடந்தோறும் புதிதாக மாடம் எழுப்பி அவர் மனம் குளிர பலியினங்களை வெட்டி உறவினர் ஒன்றுகூடி என்றோ இறந்தவனை காலகாலமாய் போற்றி வந்தனர். அவனே கருப்பு!
கருப்பரை பலரும் ஆங்காங்கே கண்டதாய் பல கதைகள் உண்டு. அப்டி ஒரு கதை இது,
சரியாய் 11 வருடம் முன்பு,
மூனுநாளா வேலைக்கு வரலையேனு, நண்பர்கள் சூப்பர்வைசருக்கு போன்போட்டோம். அவங்க அம்மாச்சிக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பத்திரில சீரியஸ்னு சொன்னார். இது வழக்கமானதுதான். ஆனா அடுத்து சொன்னதுதான் புதுசு.
அவன் பாட்டி அதிகாலை 4.30-5 க்கு எந்திருச்சிடுவாங்க, தினமும் மாட்டுக்கு கூளம் போட்டு தன்னிக்காட்டி, கிணற்றடில தண்ணீர் இறைச்சி பாத்திரம் விளக்கிடுவாங்க. அப்படிதான் மூனுநாள் முன்னாடி மாட்டுக்கு தண்ணிகாட்டிட்டு கிணற்றடிக்கு வரப்ப கிணத்து திண்டுல கால்மேல கால்போட்டு தலைல உருமா கட்டி, தோள்ல ஒரு அங்கி மாட்டி சாட்டைய தொங்கவிட்டு வெற்றுமார்போட திரும்பி உட்கார்ந்து ஒரு ஆள் சுருட்டு குடிச்சிட்டு இருந்திருக்காரு! அம்மாச்சி யார்ரா!!!!! அதுனு சத்தம் போட்ருக்கு, அந்த ஆள் மசியவேயில்லை. கடுப்பான ஆச்சி கைல பாத்திரம்ல இருந்த பழைய கழனி தண்ணிய வேகமா கிணத்துல உட்கார்ந்திருந்த ஆள்மேல ஊத்திருக்கு!
அவ்வளவுதான் அந்த உருவம் கடுப்பாகி திரும்பியது! ஆச்சி இப்போ அந்த உருவத்த நல்லா பாக்குது சிவந்துபோன கண்ணு முருக்குமீசையோட கைல அருவாள எடுத்துட்டு வேகமா ஓங்கியது! அப்புறம் விழியை மிரட்டி, இடதுகைல அருவாள பிடிச்சி வலதுகைக்கால கண்ணத்துல ஓங்கி இரண்டு அறை! அவ்வுளவுதான் கிளவி மயங்கிருச்சி!
இதுதான் அந்த அண்ணன் சொன்னது நாங்க போய் ஆஸ்பத்திரில பாத்தோம்! அந்த ஆச்சி ஆஸ்த்திரில மயங்கிய நிலையில் கிடந்தது. கண்ணம் நல்லா கண்ணு வரை வீங்கியிருந்தது. இடது கண்ணம் அறைவாங்கி இரத்தம் வழிந்த சுவடு தெரிந்தது. இவ்வளவு விவரமும் சொன்ன ஆச்சி அதன்பிறகு இரண்டு நாளில் இறந்தும் போனார். அதன்பின் அவர்கள் வீட்டில் கிடா பலிகொடுத்து கருப்பை சமாதானப்படுத்தி வைத்தனர்.
No comments:
Post a Comment