அமானுஷ்ய அனுபவம்: 08
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
நரகம் நீக்குபவனே போற்றி
நாய் வாகனனே போற்றி நாடியருள்வோனே போற்றி
நிமலனே போற்றி
நிர்வாணனே போற்றி
இதுவரை உலக அளவில் பிரபலமான சில மர்மங்களை கண்டோம். இப்ப லோக்கல் அனுபவம் ஒன்றை காண்போம், தகவலாளி எனது நண்பன்தான் பொய் சொல்லும் அவசியம் அவனுக்கு இல்லை. அவன் கண்களின் உண்மை பேசும்போது ஏற்படும் ஒரு பரவசம் தெரிந்தது.
ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறான் ஜீவா. இனி நடந்ததை அவன் கூறிய நடையிலே காண்போம்.
ஒரு நேர்த்திக்கடனுக்காக விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை நோக்கி குடும்பத்துடன் சென்றிருந்தோம்.அர்ச்சுனா, வைப்பாறு என்னும் இரண்டு ஆறுகளுக்கு இடையில் கோயில் கொண்டுள்ளாள் மாரியம்மன்.பத்து வருடம் முன்பு அப்போது பெய்த மலையில் அர்ச்சுனா நதியில் முழங்கால் மூழ்கும் வரை வெள்ளம். தற்காலிக தெப்பம் ஏற்படுத்தி குடும்பத்தினர் அதில் சென்றோம். இரவு கோவிலில் தங்கி காலையில் கிடாவெட்டி செல்வோம், இதுவே அங்கு பிராதான நேர்த்திக்கடன். அதேபோல் அனைவரும் அங்கு சென்று தங்கி உணவருந்தி படுத்தோம். நள்ளிரவு இரண்டு மணி இருக்கும், இயற்கை உந்துதல் காரணமாய் கொஞ்சம் தள்ளி உள்ள காட்டில் நடந்து சென்றேன். அருகே பெண்கள் இயற்கை உபாதை கழிக்க வந்து சென்று கொண்டிருந்ததால், கொஞ்சம் போகலாமென உள்ளே போக, வழிமாறி நடுக்காட்டுக்குள்ளேயே போய்விட்டேன். தூரத்தில் தெரிந்த மாரியம்மன்கோவில் விமான விளக்கும் கண்ணிலிருந்து மறைந்தே விட்டது. சுற்றிலும் மையிருட்டு, ஆந்தைகளும், இரவு நேர கீச்சானும் கத்தி பீதியை கிளப்பிக் கொண்டிருந்தது. பயத்தில் வேர்த்துக் கொட்டியது. கையில் 1110 போன் தான் இருந்தது. அந்த வெளிச்சத்தை வைத்து தான் சுற்றி பார்த்தேன். முழுக்க கருவேலங்காடு,
திடீரென நாயின் குலைப்பு சத்தம் கேட்டது. தொலைவில் கேட்ட சத்தம், மெல்ல மெல்ல அருகே கேட்க ஆரம்பித்தது. பயத்தில் கால்கள் நடுங்க ஆரம்பித்தது, மெல்ல நடையை வேகமாக்கினேன், நடக்க நடக்க பின்னாலிருந்த நாயின் சப்தமும் அருகே கேட்க ஆரம்பித்ததது. பயத்தில் கொஞ்சம் மெதுவாக ஓட ஆரம்பித்தேன், என்னைத்தாண்டி நாய் முன்னே வந்தது. அப்போதுதான் நாயை கவனித்தேன். நாயா அது கன்றுக்குட்டி மாதிரி நல்ல உயரம் கொழுத்த உடல் கழுத்தில் மணி, நெற்றியில் குங்குமம். என்னை பார்த்ததும் நடையை மெதுவாக்கியது! பின் நான் முன்னே சென்றேன் பின்னால் நாயின் குலைப்பு கேட்காது, நாயின் இளைப்பு சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே வந்தது. நான் மொபைல் டார்ச் வைத்து, அதன் வெளிச்சத்தில் நடந்து சென்றேன்.பின் சிறிது நேரத்தில் இருவழி மண்பாதை கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது. வலது புரத்தில் பாதை கொஞ்சம் பெரிதாக இருந்தது, அதை நோக்கி கால் நடக்கையில் பின்னாளிலிருந்த நாய் விரட்டும் தோரணையில் வேகமாய் குரைத்தது. அதன்பிறகு நான் பின்வாங்க, நாயின் குரைப்பு குறைய, பின் இடதுபுறம் நோக்கி நடந்தேன். சிறிது நேரத்தில் நாயின் இளைப்புசத்தமும் குரைப்பும் முற்றிலும் நின்றுபோனதை உணர்ந்தேன். பின்னாடி திரும்பினால் நாய் காணவில்லை. ஆனால் கண்முன்னே கோவிலின் விமான ஒளி தெரிந்தது. பின் விருவிருவென நாய்க்கு நன்றி சொல்லி கோவிலுக்கு வந்தேன். அதற்குள் எனை காணாமல் அனைவரும் கோவிலையே அலசி வைத்தனர். இரண்டு மணிக்கு சென்ற நான், திரும்பிவருகையில் நாலறை மணி ஆயிருந்தது. கோவிலுக்கு வந்ததும் மாமாதான் முதலில் என்னை பார்த்தார். அதன்பின் கன்னத்தில் பளாரென ஒரு அறையை வாங்கி, நடந்ததை கூறினேன். அருகேயிருந்த பூசாரி ஒருவர், காலையில் அர்ச்சுனா நதியில் குளித்துவிட்டு கோவில் வாசலில் தலையை சுத்தி தேங்காய் உடையுங்கள் என தாயிடம் கூறினார். சரியென கூறிவிட்டு 7 மணியளவில் ஆற்றில் குடும்பத்துடன் நீராடிவிட்டு, கடையில் தேங்காய் வாங்கி, கோவில் வாசலில் என்னை நிற்க தேங்காயில் குங்குமம் தடவி@, குடுமியில் கற்பூரம் வைத்து எனை சுற்றினர், பின் கற்பூரம் அணைந்தபின் என் கையாலேயே சூரைத்தேங்காய் உடைக்க சொல்லினர், நானும் வாசலில் தேங்காய் உடைக்க ஒரு பெரிய பாதி அருகேயிருந்த சிறிய ஆலயத்தின் வாசலில் விழுந்தது, சரி அதைபார்ப்போமே என போனேன். அங்கே பைரவர் சிலை இருந்தது. அவர் பின்னால் இரவில் பார்த்த அதே தோற்றத்தில் நாய் இருந்தது!
எனக்கோ பேரதிர்ச்சி பின் கோவில் பூசாரியிடம் குடும்பத்துடன் இரவு நடந்ததை கூறினோம். பைரவனை பார்த்தியாப்பா! ரொம்ப வருஷம் முன்னாடி இதேமாதிரி என் உறவுக்கார பையன் பார்த்திருக்கான் நிறைய பேர் பார்த்திருப்பாங்க வெளிய சொல்றதில்லை. இதே மாதிரி வழிதெரியாதவங்க, யாரும் வைப்பாறு எல்லைவர வழிமாறிபோனா பைரவரு உதவிக்கு வருவாறு, அதுவரைக்கும் அவரோட எல்லைதான், இனிமே உனக்கு நல்லது நடக்கும் என விபூதி பூசிவிட்டார்.

No comments:
Post a Comment